உன் புன்னகையில்
உதிரும் மலர்கள் மட்டும்
வாடுவதேயில்லே எப்போதும்
நீ பேச வாய் திறக்கும்போதெல்லாம்
பேச்சற்றுப் போகிறேன்
உன் கண்கள்
பேசும்போது மட்டும்
காணாமல் போய் விடுவதில்
கொள்ளை மகிழ்ச்சி எனக்கு
உரிமையோடு நீ என்னை
கோபிக்கும்போது
பொங்கித் தெறிக்கும் உன் வார்த்தைகளில்
பொங்கி வழிகிறது என் மனது
நிறைகுடமாய்
களைத்த மனதிற்கு இதமான
மென்தொடுகைகளால்
உயிர்ப்பூட்டுகிறாய் நீ
உன் கரங்கள்
தொடும்போது
கழுவப்படுகின்றன என் கறைகள்
உன் அரவணைப்பில்
அன்னையின்
அன்பைக் காண்கிறேன
சேயாய் மடிசாயும் என்
தலைமுடியைக் கோதும்
உன் விரல்களில்
தாய்மையின் கரிசனம் காட்டி
புதிதாய் பிறந்ததாய்
புலப்படச் செய்கிறாய்
என்னவென்று சொல்ல முடியாத
பரவசத்தில் படர வைக்கிறாய்
தளும்பிக் கிடக்கும் என் மனதை
இளைப்பாறக் கிடைத்த
தோள்களின்
மென்மையான வலிமையில்
மறக்கிறேன் என் சுமைகளை
அறியாமல் போன நாட்களின்
அந்திப் பொழுதுகளை
புரியாதிருந்த நாட்களின்
வெறும் கணங்களை
எண்ணிச் சிரிக்கிறேன்
வாழ்க்கையில் வசந்தம்
உன் பேரோடுதான்
வருகிறதென்பதை இப்போதுதான்
உணர்கிறேன்
அன்றாட வாழ்க்கையின்
அவஸ்தைகளுக்குள்ளும்
மூச்சிறுக்கம் இல்லாமல்
முழுமையாய் சுவாசிக்கிறேன்
எப்போதும்
நீ என்னோடு இருப்பதால்
********
No comments:
Post a Comment